Thursday, August 8, 2013

நல்வரவு !




அன்புடையீர், 

        வணக்கம். நமது பாரத மிகுமின் தொழிலக முத்தமிழ் மன்ற  வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

     திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் தொழிலக வளாகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று 46 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் முத்தமிழ் மன்றமானது, தமிழ்மொழி வளர்ச்சிக்கான பணிகளை இடைவிடாது செய்துவரும் அமைப்பாகும்.

   நமது வளாகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி நகரை சுற்றியுள்ள அனைத்துப் பள்ளிகளின் மாணாக்கார்களுக்கு தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசளிப்பத்தின் மூலம் முத்தமிழ் மன்றம் அவர்களது மனங்களில் தமிழ்ப்பற்றை பசுமரத்தாணியாக பதியச் செய்கிறது. மேலும் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறக்கூடிய மாணாக்கார்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

     தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பங்காற்றிய தமிழறிஞர்களான தெய்வப்புலவர் திருவள்ளுவர், மகாகவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகிய நால்வருக்கும் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அவர்களது அரும்பணியை போற்றி வருகிறது.

   இவைதவிர பட்டிமன்றம், நூல் ஆய்வரங்கம், சிந்தனை அரங்கம், பேசும்கலை வளர்ப்போம், மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் முத்தமிழ் மன்றத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடதக்கவை.

     இத்தகு பெருமை மிகுந்த நமது முத்தமிழ் மன்றத்தில் உறுப்பினராக சேர்வதன் மூலம் தமிழ்மொழி வளர்சிப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.


தங்கள் அன்புள்ள,
செ.இராமசெயம்
அமைப்புச் செயலாளர்
முத்தமிழ் மன்றம்.

Tuesday, July 30, 2013

பாவேந்தர் விழா - 2013

திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் தொழிலக முத்தமிழ் மன்றத்தில் கடந்த அன்று பாவேந்தர் பாரதிதாசன் விழா மனமகிழ் மன்ற உள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.வீ.காமராசு அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவரும் இனப்பில்லா எஃகு குழாய் தொழிலகத்தின் போதுமேலாளரும் ஆகிய திரு.ஞா.செயப்பிரகாசு அவர்கள் தலைமை ஏற்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பெல் வளாகம் மற்றும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பாரதிதாசன் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர் விழாவில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். முன்னதாக போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர் மேடையில் தமது திறமையை வெளிப்படுத்தினர்.

சிறப்புரையில் முனைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் நிகழ்த்திய உரையில் போட்டியில் வெற்றிபெறாத மாணவர்களையும் ஊக்குவித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

மன்றத்தின் செயலாளர் திரு.கோ.திரவியம் குறளும் பொருளும் வழங்கினார். நிகழ்ச்சியை செயலாளர் மு.குமார் தொகுத்து வழங்கினார். மன்றத்தின் அமைப்புச்செயலாளர் திரு செ. இராமசெயம் நன்றியுரைக் கூறி விழாவை நிறைவு செய்தார்.